விருதுநகரில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு
இன்று பிற்பகலில் கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்ய உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாலையில் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நாளை காலை, குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதற்கடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு - இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 வீடுகளை இடித்து தள்ளும் அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கின.
கோவை செல்வராஜ் மறைவு - அமைச்சர் நேரில் அஞ்சலி
முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் திமுக செய்தித் தொடர்பாளரான கோவை செல்வராஜ், நேற்று மாரடைப்பால் காலமான நிலையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அஞ்சலி திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், ரவி, முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது - ப.சிதம்பரம்
”தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது, யாராலும் கூட்டணியை உடைக்கவோ, கலைக்கவோ முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை பாஜக கொண்டு வந்தால் தோற்கடிப்போம்!"-காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
நவ.23ம் தேதி கிராம சபைக் கூட்டம்
தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு
நடப்பு கல்வியாண்டில், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் இறுதிச் சுற்றில், இடங்கள் பெற்றும் கல்லூரியில் சேராத 20 மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் சேர ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பி.டி.எஸ் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 24 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வு முடிந்ததால் இந்த இடங்கள் காலியாகவே இருக்கும்.
யானை குட்டி வீடியோ வைரல்
கேரள மாநிலம் வயநாடு தோள்பட்டி என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்து வழி தவறி வந்த குட்டி யானை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்.
சபரிமலைக்கு ஆதார் கட்டாயம்
மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அபார வெற்றி
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 203 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்கா வெறும் 141 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசி ஆட்டநாயகன் விருது வென்றார்.