அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஹிமாச்சல பிரதேச முதல்வருக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்த சமோசா மற்றும் கேக்கை அவரது பாதுகாப்பு ஊழியர்களுக்கு சில அதிகாரிகள் வழங்கவிட்டனர். இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் விசாரித்து  வருகின்றனர்.


கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, சிஐடி தலைமையகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், விருந்தினராக பங்கேற்ற ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு-க்கு சமோசா மற்றும் கேக் வழங்கப்படவிருந்தது. 


சமோசாவால் எழுந்த சர்ச்சை:


ஆனால், முதலமைச்சருக்கு தரப்படவிருந்த சமோசா மற்றும் கேக், தவறுதலாக அவரது பாதுகாப்பு ஊழியருக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச சிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. சிஐடியின் விசாரணை அறிக்கையில், "சமோசா மற்றும் கேக் தவறுதலாக அளிக்கப்பட்டது அரசுக்கு எதிரான செயல். 


விவிஐபியின் மரியாதையை குலைக்கும் விதமான குற்றம். இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதோ திட்டம் இருப்பதாக தோன்றுகிறது" என குறிப்பிடப்பட்டது. இதை கடுமையாக விமர்சித்த ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜெய்ராம் தாகூர், "இப்போதெல்லாம், இமாச்சலப் பிரதேசத்தில் அரசு எடுக்கும் முடிவுகள் நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறுகிறது.


ஏனெனில், சிந்திக்காமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்போது விவாதிக்கப்படும் மற்றொரு தலைப்பு என்னவென்றால், சமோசா அடைய வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை. அவை நடுவில் தொலைந்துவிட்டன. இது மிகவும் தீவிரமான விஷயம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் இமாச்சலப் பிரதேச அரசாங்கமும் கருதுகிறது.


முதல்வர் தந்த விளக்கம்:


இது அரசுக்கு எதிரான செயல் என்றும் கூறப்பட்டது. அதை உண்டவர்களும் அரசாங்கத்தில்தான் இருக்கிறார்கள். இப்படியிருக்க, இது எப்படி அரசுக்கு எதிரான நடவடிக்கையாகும். துரதிர்ஷ்டவசமாக, சிந்திக்காமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன" என்றார்.


 






இதுகுறித்து விளக்கம் அளித்த ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் சுகு, "அப்படி எதுவும் இல்லை. தவறான நடத்தை குறித்தே சிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், நீங்கள் (ஊடகங்கள்) 'சமோசா' பற்றி செய்திகளை வெளியிடுகிறீர்கள்" என்றார்.