டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. 


இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கடந்த சில ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் வெடிக்க முழுத் தடை விதித்து டெல்லி அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.


கடுப்பான உச்ச நீதிமன்றம்:


பட்டாசுகளுக்கு தடை இருந்த போதிலும் தீபாவளி அன்று டெல்லியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக, தேசிய தலைநகரான டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றது. தீபாவளி முடிந்து நான்கு நாள்கள் ஆன பிறகும் கூட காற்று மாசு குறையவில்லை.


இந்த நிலையில், டெல்லியில் பட்டாசுகள் மீதான தடை பேப்பரில் மட்டுமே இருந்ததாக உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் மீது தடை அறிவிக்கப்படுவதாகவும், ஆனால் அது காற்றில் பறக்கவிடப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அரசையும் போலீஸையும் லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதிகள்:


இதுகுறித்து டெல்லி அரசும் காவல்துறையும் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், "பட்டாசுகள் மீதான தடை (டெல்லி என்சிஆர்) அமல்படுத்தப்படவில்லை என்று பரவலான செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது மாசுபாட்டைக் குறைக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.


பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு என்ன ஆனது? எப்படி செயல்படுத்தப்படுகிறது. அதை அமல்படுத்தியிருக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டிலாவது மாசுபாட்டால் டெல்லி மூச்சுத் திணறாமல் இருப்பதை உறுதிசெய்ய குறைந்த பட்சம் அடுத்த ஆண்டிற்குள் ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


இதையும் படிக்க: USA Election: ஹிலாரி கிளிண்டனுக்கு எமனாக இருந்த ஸ்விங் States: அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் அந்த 7 மாநிலங்கள்.!