முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
ஷோரனூர் அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது ரயில் மோதிய விபத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
போக்குவரத்து கழகம் சாதனை
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளில் நேற்று (நவ.3) 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம். ஒருநாளில் அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல்?
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் தொடர்வதாக தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறி தொடர்ந்து செயல்படுவதாக ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது. பட்டியலின ஆசிரியர்களுக்கான நியாயமான பதவி உயர்வு கிடைக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க திட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ஜார்கண்டில் சூடுபிடிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களம்
ஜார்கண்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டப்படும், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்துடன் ரூ.21,000 நிதியுதவி, பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும், பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். வரும் 13 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சென்செக்ஸ் 7,400 புள்ளிகள் சரிவு
இந்திய பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டை சீன பங்குச்சந்தைக்கு திருப்பிவிட்ட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். இதனால், பொதுத்துறை நிறுவனங்கள், வாகன நிறுவனம் மற்றும் உருக்கு நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 7,400 புள்ளிகள் சரிந்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளும், நிஃப்டி 366 புள்ளிகளும் சரிந்தன.
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்
உலக நாடுகள் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே 7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளில் 270-க்கும் அதிகமானோரின் ஆதரவை பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஸ்பெயின் அதிபர் மீது முட்டை வீச்சு
மழை வெள்ளத்தால் ஸ்பெயின் நாட்டில் 230-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, பல நகரங்களும் சேறும், சகதியுமாக ஸ்தம்பித்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் ஒரு வாரம் கழித்து வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த, மன்னர் ஆறாம் ஃபிலிப், ராணி மற்றும் பிரதமர் மீது பொதுமக்கள் முட்டை மற்றும் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓய்வை அறிவித்தார் விரித்திமான் சாஹா
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் விரித்திமான் சாஹா அறிவித்துள்ளார். நடப்பு ரஞ்சி கோப்பை சீசன் தான் தன்னுடைய கடைசி தொடர் என அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க சாஹா பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.