UP Boy Swallow : உத்தரபிரதேசத்தில் பல்வேறு பொருட்களை, விழுங்கிய 14 வயது சிறுவனின், உயிரை காப்பாற்றும் 5 மணி நேர முயற்சி தோல்வியில் முடிந்தது.


14 வயது சிறுவன் உயிரிழப்பு:


ஹத்ராஸைச் சேர்ந்த 14 வயது சிறுவன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.  மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றில் இருந்து பேட்டரிகள் மற்றும் ரேசர் பிளேடுகள் உட்பட 65 பொருட்களை அகற்ற முயன்றனர்.  சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த சிக்கலான மருத்துவச் செயல்முறை முடிவடைந்த,  சில மணி நேரத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, சிறுவன் கடந்த காலத்தில் விழுங்கிய பொருட்களை அகற்றியும் உயிரை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


65 வகையான பொருட்கள்:


சிறுவன் விழுங்கிய பொருட்களில் பேட்டரிகள், செயின், ரேஸர் பிளேட் துண்டுகள் மற்றும் ஸ்க்ரூக்கள் ஆகியவையும் அடங்கும். அவை நீண்ட நாட்கள் உடலில் இருந்ததால் ஏற்பட்ட, குடல் நோய்த்தொற்றால் சிறுவன் உயிரிழந்ததாக மருத்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதன்படி, “ஆதித்ய ஷர்மா என்ற அந்த சிறுவன், சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது வயிற்றில் அந்த பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடித்தனர். குடல் தொற்று காரணமாக அவர் இறந்தார்” என்று சப்தர்ஜங் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நடந்தது என்ன?


ஆதித்யாவின் தந்தை சஞ்சேத் ஷர்மா பேசுகையில், மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியம் காரணமாக ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மாதம் எனது மகனை அழைத்துச் சென்றேன்.  பிறகு சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற ஜெய்ப்பூர், அலிகார், நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடுத்த வாரங்களில் ஆதித்யாவை அழைத்துச் சென்றேன். கடந்த காலத்தில் எனது மகனுக்கு எந்த உடல் மற்றும் மன நோய்களும் இல்லை” என தெரிவித்தார்.


மருத்துவ சிகிச்சைகள்:


ஆதித்யா முதலில் ஆக்ராவிற்கும் பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் மற்றும் சோதனைகளை நடத்தினர். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, ​​அவரது பெற்றோர் அலிகாருக்கு அழைத்துச் சென்றனர். சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, "சுவாசக் குழாயில் அடைப்பு" கண்டறியப்பட்டது. அதை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அறுவை சிகிச்சை செய்ததை தொடர்ந்து சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது.


அக்டோபர் 26 அன்று அலிகரில் விரிவான அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்குப் பிறகு, ஆதித்யாவின் வயிற்றில் 19 பொருட்கள் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  இதையடுத்து நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நொய்டாவில், மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் சிறுவனின் வயிற்றில் 42 பொருட்களைக் கண்டறிந்தனர்.


தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்ததில் சிறுவனின் வயிற்றில் 65 பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், நோயாளியின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 280 ஆக எட்டியுள்ளது. இதையடுத்து விரைந்து அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், சிறுவன் உயிர் பிரிந்துள்ளது.