Kashmir Indian Military: இந்திய ராணுவம் பிஸ்கட் உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உஸ்மானை கொன்ற நிகழ்வு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி:


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) கமாண்டர் உஸ்மான் கொல்லப்பட்டான். ஸ்ரீநகரின் அதிக மக்கள் தொகை கொண்ட கன்யார் பகுதியில் சனிக்கிழமையன்று, நாள் முழுவதும் நீடித்த என்கவுண்டரில் அந்த உயர்மட்ட பயங்கரவாத தளபதி கொல்லப்பட்டான். இந்த பரபரப்பான என்கவுன்டரில் பிஸ்கட் முக்கிய பங்கு வகித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீநகரில் நடந்த மிகவும் குறிப்பிடத்தக்க என்கவுன்டர் இதுவாகும். இந்த சம்பவத்தில் உள்ளூர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து செயல்பட்டு இலக்கை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.


முக்கிய பங்காற்றிய பிஸ்கட் :


தெருநாய்கள் அதிகம் இருந்த குடியிருப்பு பகுதியில் உஸ்மான் இருந்ததால் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பாதுகாப்பு படையினருக்கு அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. தேடுதல் குழுவினர் அந்த பகுதியில் நுழைந்ததுமே நாய்கள் குரைப்பதை கொண்டு, தீவிரவாதிகள் தப்பித்து செல்ல ஏதுவான சூழல் இருந்தது. இதனை உஸ்மான் ஒரு பாதுகாப்பு வளையமாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தான் சனிக்கிழமை அன்று விடியலுக்கு முன்பு நடைபெறும் பிரார்த்தனையை ஒட்டிய நேரத்தில், பாதுகாப்பு படையினர் உஸ்மான் தங்கியிருந்த பகுதியில் உள்ள 30 வீடுகளை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, பிஸ்கட்களை கொண்டு தெருநாய்களை சமாதானப்படுத்தி, இலக்கை நெருங்கினார்.


இதையும் படியுங்கள்: Terrorist Organizations: இந்தியாவில் இத்தனை தீவிரவாத அமைப்புகளா? தலைசுற்ற வைக்கும் லிஸ்ட் இதோ..!


துப்பாக்கிச் சூட்டில் வீழ்ந்த தீவிரவாதி உஸ்மான்:


பாதுகாப்பு படையினர் தன்னை நெருங்கியதை உணர்ந்ததுமே, உஸ்மான் AK-47, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஏராளமான கையெறி குண்டுகளுடன் பாதுகாப்புப் படையினருடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டார். கையெறி குண்டுகளையும் வீசினார். இதனால், ஏற்பட்ட தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல், விரைந்து செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அணைத்தனர்.  பல மணிநேர துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு உஸ்மான் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 


யார் இந்த உஸ்மான்?


காஷ்மீர் பள்ளத்தாக்கில் பலரால் அறியப்பட்ட நபரான உஸ்மான், 2000 களின் முற்பகுதியில் இருந்து அரங்கேற்றப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதில் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார். சிறிது காலம் பாகிஸ்தானில் தங்கியிருந்த பிறகு, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவி, கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் வானியை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகரில் நடைபெற்ற, தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.