விஜய் தலைமையில் தவெக ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில், இன்று அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. விஜய் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், விமர்சனங்களுக்கு பதிலளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 16 வயது சிறுமி அடித்துக் கொலை
சென்னை அமைந்தகரையில் சட்டவிரோதமாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி அடித்துக் கொலை, குளியலறையில் சடலமாக மீட்பு. 6 மாதங்களுக்கு மேலாக துன்புறுத்தப்பட்டது அம்பலம். வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், மனைவி நாசியா, அவர்களது நண்பர் லோகேஷ் உள்ளிட 6 பேர் கைது. சிறுமியின் உடலிஸ் ஆங்காங்கே சிகரெட்டினால் சூடு வைத்த காயங்கள், கொடூரமாக தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன.
வயநாட்டில் பிரியங்கா காந்தி
இடைத்தேர்தல் பரப்புரைக்காக பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகிறார். தொடர்ந்து 5 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் வசதி
சபரிமலையில் மண்டலபூஜை, மகர விளக்கு சீசனை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மீண்டும் ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பம்பை, எருமேலி மற்றும் பீர்மேடு ஆகிய இடங்களில், ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யமுனை நதியில் நச்சு நுரை
டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை நதியில் வெண்படலமாக மிதந்து வரும் நச்சு நுரை. நதியின் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மோட்டார் படகு மற்றும் இயந்திரங்கள் வசதிகளுடன் நுரையை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆபாச வீடியோக்களை அனுப்பிய பைக்-டாக்ஸி ஓட்டுனர்
கொல்கத்தாவில் பைக்-டாக்ஸி புக் செய்து, கேன்சல் செய்த பெண் மருத்துவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய ஓட்டுநர் கைது. புக் செய்து நீண்ட நேரமாக பைக் வராததால் புக்கிங்கை ரத்து செய்ததாகவும், உடனடியாக தனது எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் வந்ததாகவும் அப்பெண் அளித்த புகாரில் சில மணி நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து போலீஸ் நடவடிக்கை
கட்சிக்குள் புதிய அணியை தொடங்கிய பவன் கல்யாண்
சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் 'நரசிம்ம வாராஹி படை' என்ற புதிய அணியை தொடங்குவதாக அக்கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் சனாதனம் குறித்து விமர்சிப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். இதுதவிர, 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
ஸ்பெயின் - பலி எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு
ஸ்பெயினில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
தடுமாறும் இந்திய அணி:
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவிற்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர். 10.30 மணி நிலவரப்படி, 31 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.