MGNREG Fraud: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் pஅல்வேறு மாநிலங்களில் நடந்த நிதி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உள் தணிக்கை:
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் (MORD) உள் தணிக்கை பிரிவு (IAW) நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2023-24 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MG-NREGS) கீழ் தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் மொத்தமாக ரூ.35.37 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை IAW கண்டறிந்துள்ளது.
இதில், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ.34.02 கோடியும், நாகூரில் (ராஜஸ்தான்) ரூ.1.09 கோடியும், மொரேனாவில் (மத்தியப் பிரதேசம்) ரூ.26 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐஏடபிள்யூ கண்டறிந்துள்ளது. ஆதாரங்களின்படி, IAW ஆல் கண்டறியப்பட்ட குறைபாடுகள் 2023-24 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தணிக்கையின் வருடாந்திர மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும். இந்த தகவல்கள் கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு MoRD உடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தணிக்கை செய்யப்பட்ட 92 பணிகள்
2023-24 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள MGNREGS உட்பட பல்வேறு கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் 92 பணிகளை IAW தணிக்கை செய்தது. மணிப்பூரின் பெர்ஜவால் மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்-ஜி) செயல்படுத்தப்பட்டதில் ரூ.5.20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற திட்டங்களிலும் இழப்புகள்:
IAW அறிக்கையின்படி, குஜராத், சிக்கிம், மணிப்பூர், ஒடிசா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில், MG-NREGS, PMAY-G மற்றும் பிரதான் மந்திரி கிராம் சதக் ஆகியவற்றின் கீழ் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாநிலங்களில் வீணான மற்றும் அங்கீகரிக்கப்படாத செலவினங்களின் மொத்தத் தொகை ரூ.15.20 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ரூ.23.17 கோடி இழப்பு
கடந்த 2022-23 நிதியாண்டில், NREGS, PMGSY மற்றும் தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) செயல்படுத்துவதில் IAW ரூ.23.17 கோடி இழப்பைக் கண்டறிந்துள்ளது. MGNREGS-ன் கீழ் அதிகபட்சமாக ரூ.22.39 கோடி இழப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து PMGSY-யில் ரூ.74 லட்சமும், என்எஸ்ஏபி-யில் ரூ.2 லட்சமும் இழப்பு ஏற்பட்டுள்ளது. MGNREGS இல் இரண்டு மாவட்டங்களில் இருந்து இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரூ.22.28 கோடியும், மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரூ.11.80 லட்சமும் அடங்கும். PMGSY இன் கீழ், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் 74 லட்ச ரூபாய் இழப்பும், NSAP இன் கீழ் மேற்கு வங்காளத்தின் மால்டாவில் 2.81 லட்சம் ரூபாய் இழப்பும் கண்டறியப்பட்டுள்ளது.