தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட்


சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது. இன்று மாலை - நாளை அதிகாலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



பாம்பன் பாலம் கட்டுமானத்தில் தரமில்லை


ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பாம்பன் பால கட்டுமான பணிகள் தரமில்லை என, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார். பளுதூக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், வெல்டிங் பணி முறையாக இல்லை என்றும் கூறியுள்ளார். இருப்பினும், சில நிபந்தனைகளுடன் ரயிலை இயக்க அனுமதி அளித்து இருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை


அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.  இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜார்கண்ட் செல்லும் உதயநிதி


ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


இன்று பதவியேற்கிறார் பிரியங்கா காந்தி


வயநாடு மக்களைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து, இன்று மக்களவையில் அவர் பதவியேற்க உள்ளார். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது இதுவே முதல்முறையாகும்.


50 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி


ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் காதலியை 50 துண்டுகளாக வெட்டி, கொலை செய்த கறி வெட்டும் வேலை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து லிவ் -இன் முறையில் மற்றொரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து, இளைஞரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியதால் காதலன் வெறிச்செயல். 


பாகிஸ்தானில் பழங்குடியினர் மோதல் - 76 பேர் பலி


பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மோதம் நீடித்து வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.


தென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு


தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியை கடந்ததால்,  சியோல் உள்பட அந்த நாட்டின் சர்வதேச விமான நிலையங்கள் முழுவதுமாக மூடப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


சாம்பியன்ஸ் டிராபி தொடர் எங்கு நடைபெறும்?


சாம்பியன்ஸ் டிராபி (CT25) தொடருக்கான அட்டவணையை இறுதி செய்ய, சர்வதேச கிரிக்கெட் வாரியம் நாளை ஆலோசனை. பாகிஸ்தானுக்கு செல்வதில்லை என்ற முடிவில் இந்தியா உறுதியாக உள்ள நிலையில், hybrid மாடல் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல்.


சுப்மன் கில் அவுட்


ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும், இந்திய வீரர் கில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால்  பயிற்சி போட்டி மற்றும் 2வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.