Live in Murder: தமிழ்நாட்டில் லிவ் - இன் உறவில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்னை, ஜார்கண்ட் இளைஞர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்


பெண்களுக்கு வீடுகளிலும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தே அதிக ஆபத்துகள் நிகழ்வதாக, அண்மயில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக தான், ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் ஒரு கொடூர கொலை அரங்கேறியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி,  கசாப்பு கடையில் கறி வெட்டும் பணி செய்து வந்த 25 வயது வந்த இளைஞர், லிவ்-இன் உறவில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.


பெண் கொல்லப்பட்ட சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, கடந்த 24ம் தேதியன்று ஜரியாகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட,  ஜோர்டாக் கிராமத்திற்கு அருகில் ஒரு தெரு நாய் மனித உடல் உறுப்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, விசாரணையின் முடிவில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளியான நரேஷ் பெங்கரா கைது செய்யப்பட்டுள்ளார்.



நடந்தது என்ன?


காவல்துறையின் விசாரணையின்படி, குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் சேர்ந்து,  கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் லிவ் - இன் முறையில் வசித்து வந்துள்ளார். சிறிது காலத்திற்கு முன்பு, மீண்டும் ஜார்கண்டிற்கு சென்ற நரேஷ், தனது காதலியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு மீண்டும் தமிழகத்திற்கு வந்து, தனது காதலியுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்.


அப்போது, நரேஷ் உடன் சேர்ந்து அவரது வீட்டில் வசிக்க காதலி வற்புறுத்த தொடங்கியுள்ளார். வேறு வழியின்றி சொந்த ஊருக்கு இருவரும் திரும்பினாலும், காதலியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நரேஷ் விரும்பவில்லை. இதையடுத்து, ஜோர்டாக் கிராமம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொன்று கொலை செய்துள்ளார். தொடர்ந்து பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். காட்டு மிருகங்கள் உடல்பாகங்களை தின்றுவிடும் என நினைத்து அங்கிருந்து நரேஷ் தப்பிச் சென்று தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்” என காவல்துறை தெரிவித்துள்ளது.


குற்றவாளி சிக்கியது எப்படி?


இதனிடையே, கொல்லப்பட்ட இளம்பெண் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டபோதே, தான் ரயில் ஏறிவிட்டதாகவும், தனது காதலனுடன் சேர்ந்து வாழ இருப்பதாகவும் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேநேரம், உடல்பாகங்களை கைப்பற்றிய காவல்துறை, அந்த பெண்ணின் உடைமைகளையும் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர். அதிலிருந்து கண்டெடுத்த ஆதார் அட்டையில் இருந்த பெண்ணின் முகவரியின் மூலம், அவரது தாயை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவரும் கொல்லப்பட்டது தனது மகள் தான் என்பது உறுதி செய்ததோடு, நரேஷ் உடனான பழக்கம் தொடர்பாகவும் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதை நரேஷ் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.