நெருங்கும் ஃபெங்கல் புயல்


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. அதோடு, டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சில மாவட்டங்களுக்கு கன முதல் அதிகன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு


மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், பாலிடெக்னிக் தேர்வுகள் மற்றும் பட்டயபடிப்பு தேர்வுகள் போன்றவை மறுதேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட உள்ளன.


அதிமுக செயற்குழு கூட்டம்


டிசம்பர் 15ல் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் அடுத்தடுத்து மோதல்கள் நடைபெற்று வரும் சூழலில் பொதுக்குழு கூடுகிறது.


மீண்டும் உயர்ந்த தங்கம் விலை


கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,840-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார்?


மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிசை நியமிப்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஏக்நாத் ஷிண்டேவிற்கே அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என, சிவசேனா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால்,  முதலமைச்சர் விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேயை பாஜக தொடர்ந்து சமரசப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.


வளர்ச்சியை தடுக்கும் பிரதமர் மோடி


நமது நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இணைந்து தடுக்கிறார்கள். பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை படிக்கவில்லை என்பது எனது உத்தரவாதம்  - ராகுல் காந்தி


பெண்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை - ஐ.நா.,


பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்படுகின்றனர். உலகளவில் கடந்த 2023ம் ஆண்டில் சராசரியாக 51,000 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்துக்கு அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் காரணமாக அமைந்துள்ளனர் - ஐ.நா., அறிக்கை


ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் எச்சரிக்கை


ஹிஸ்புல்லா அமைப்பு அமைதி ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். விதிகளை மீறினால் நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம் எனவும் பேசியுள்ளார்.


இந்தியா தாய்லாந்து இன்று மோதல்


10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை சந்திக்கிறது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரம், தாய்லாந்து தனது முதல் போட்டியில் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


பாதியில் வெளியேறும் இலங்கை ”ஏ” அணி 


பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை 'ஏ' அந்நாட்டு 'ஏ' அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இந்நிலையில், இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை 'ஏ' அணி தனது பாகிஸ்தான் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சொந்தநாடு திரும்ப உள்ளனர்.