சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். மாநில அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று அடைகிறதா என்பதை அறிய, ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம். மொத்தமாக 46 பேர் போட்டி. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்டியில் உள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்த வெளிமாநில வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டது.

தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம். ஒவ்வொரு ஆண்டும் காலதாமதமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விட்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

மம்தா பானர்ஜி அதிருப்தி

"கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி CBI வசம் தரப்பட்டது. நாங்களே விசாரணை செய்து இருந்தால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை உறுதி செய்து இருப்போம். விசாரணை நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” - மம்தா பானர்ஜி

சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம்

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு. ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ரூ.20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு. BSNLல் இந்த அவகாசம் 180 நாட்களாக உள்ளது.

தில் ராஜு வீட்டில் ஐடி சோதனை

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஐதராபாத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. விஜய் நடிப்பில் உருவான வாரிசு, ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் போன்ற, பல பெரிய படங்களை இவர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள WHO தவறிவிட்டதாக அவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் கையெழுத்திட்டு இருந்தார்.

தைவானில் பயங்கர நிலநடுக்கம்

தைவானில் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இரவு 12.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. 15 பேர் லேசான காயமடைந்த நிலையில்,  நல்வாய்ப்பாக நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

14 வருட சாதனை தொடருமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட, டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றதே இல்லை என்ற, சாதனைப் பயணத்தை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரஞ்சி கோப்பையில் கோலி

ரஞ்சி கோப்பையில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில்,  டெல்லிக்காக கோலி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  விராட் கோலி கடைசியாக 2012-ம் ஆண்டு உத்திரபிரதேசத்துக்கு எதிராக ரஞ்சி போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.