பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்துள்ளார். 


பீகார் மாநிலம் பாட்னாவில் 85வது அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு  நடைபெற்று வருகிறது. 


அதில் தமிழ்நாடு சார்பாக பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு வலுவாக்குவது என்பது குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்தும் அப்பாவு பேசியதாக தெரிகிறது. ஆளுநர் குறித்து விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். 


அதாவது அரசியலமைக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் எனவும் அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விஷயங்களில் குறிக்கிட்டு ஆளுநர் அரசியலமைப்பு விதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் எனவும் குறிப்பிட்டார். மேலும், ஆளுநரின் இத்தகைய தலையீடு கவலை அளிக்கிறது எனவும் அப்பாவு தெரிவித்தார். 


இதில் குறுக்கிட்ட மாநிலங்களைவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆளுநர் குறித்து பேசக்கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து ஆவேசமான அப்பாவு ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநாட்டில் பேச முடியவில்லை என்றால் வேறு எங்கு பேசுவது என கேள்வி எழுப்பினார். 


அதற்கு ஆளுநர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என மாநிலங்களை துணைத் தலைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார். 


தமிழநாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் எப்போதும் ஏகாபொருத்தமாகத்தான் இருக்கிறது. தமிழக அரசு கடைபிடித்து வரும் திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து வருகிறார். திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை, அது காலாவதியான கொள்கை. திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்துள்ளார். 


மேலும் தமிழக அரசு நிறைவேற்றும் பல மசோதாக்களையும் கிடப்பில் போட்டுள்ளார் என்ற விமர்சனங்களும் உண்டு. இது இப்படி இருக்க தமிழக அரசு ஆளுநருக்கு எங்கு பார்த்தாலும் கண்டனங்களை குவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு ஆளுநருக்கும் இடையே ஏகாப்பொருத்தம் தான் நிலவி வருகிறது.