ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம், 2 வெள்ளிப் பதக்கங்களுடன் 7 பதக்கங்களை கைப்பற்றி 46-வது இடத்தை பிடித்தது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பி.வி.சிந்து அசத்தினார். தேசமே ஒலிம்பிக் தங்க மகள்களைக் கொண்டாடி வருகிறது
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்களும், நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் புதிய சாதனையை படைத்த பி.வி.சிந்து ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்டவர். இதனால், அவருக்கு ஆந்திர மற்றும் தெலுங்கானா அரசுகள் பாராட்டுக்களையும், பரிசுகளையும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு தாயகம் திரும்பினார். ஹைதராபாத் திரும்பிய அவர் இன்று தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக பி.வி.சிந்துவிற்கு ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேட்மிண்டன் பேட் ஒன்றை தமிழிசை செளந்திரராஜன் பரிசாக வழங்கினார்.
மேலும், பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்தான் பெற்ற வெண்கலப் பதக்கத்தை தமிழிசை செளந்திரராஜனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான பார்க்டே சங்கிற்கும் தமிழிசை செளந்திரராஜன் மலர்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். அவரும் வணக்கம் தெரிவித்து பூங்கொத்தை பெற்றுக்கொண்டார். மேலும், பி.வி.சிந்து போட்டியைப் பார்த்ததாகவும், அடுத்த முறை நிச்சயம் தங்கத்தை வெல்வீர்கள் என்றும் உத்வேகம் அளிக்கும் விதத்தில் ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் கூறினார். இந்த சந்திப்பின்போது, பி.வி.சிந்துவின் தந்தை ரமணா மற்றும் தாயார் விஜயா பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பி.வி.சிந்து தான் பெற்ற வெண்கலப் பதக்கத்துடன் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினரும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து இறுதிப்போட்டிவரை சென்று வெள்ளிப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உள்பட பல நடிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.