’தன் பெயருக்குப் பின்னால் யார் பெயரைச் சேர்த்துக்கொள்வது என்று முடிவெடுக்கும் முழு சுதந்திரம் எந்த ஒரு பிள்ளைக்கும் இருக்கிறது. மகள் அப்பாவுக்கு மட்டுமே சொந்தமானவள் இல்லை. அம்மாவின் பெயரை தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ள விரும்பினால் அவள் சேர்த்துக்கொள்ளலாம்’, என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 


தன் மகள் பெயருக்குப் பின்னால் அம்மாவின் பெயருக்கு பதிலாகத் தன் பெயரைச் சேர்க்கவேண்டும் என கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு பதிலளித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி, ’தனது மகள் தன் பெயரை மட்டும்தான் அவள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனச் சொல்வதற்கு மகள் ஒன்றும் அப்பாவின் சொத்து அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ’நான் இவ்வாறு சொல்வதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆனால் உங்கள் சிந்தனை மோசமானதாக இருக்கிறது.அவளது அம்மாவின் பெயரை ஏன் அவள் உபயோகிக்கக் கூடாது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 






பிரிந்து சென்ற தன் மனைவியின் பெயரைத் தனது மைனர் மகள் அவளது பெயருக்குப் பின்னால் உபயோகித்துக் கொள்கிறார். தன் மகளுக்குத்தான் பாதுகாவலர் என்கிற முறையில் தன் பெயர் இருப்பதே சரி என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பெற்றோர் ஒருவர். 


தன் முன்னாள் மனைவி மகளின் பெயருக்குப் பின்னால் அவரது பெயரைச் சேர்த்துள்ளதால் தன்னால் காப்பீட்டுப் பயன்கள் எதையும் அனுபவிக்க முடியவில்லை என்றும் காப்பீட்டுப் பயன்கள் அத்தனையும் மகள் பெயருக்குப் பின்னால் தன் பெயர் இருந்தபோது உருவாக்கப்பட்டது என்றும் அவர் தனது வழக்கில் குறிப்பிட்டிருந்தார். 


 இந்த வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்கிற அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் எனினும் தந்தை தான் மகளின் அதிகாரபூர்வ பாதுகாவலர் என்கிற அடிப்படையில் அவரது பள்ளிக்குச் சென்று உரிமை சான்றிதழ் கோரலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 


முன்னதாக கேரள உயர்நீதிமன்றம் திருமண உறவில் பாலியல் வன்கொடுமை நிகழ்வதையும் பெண்கள் விவாகரத்து கோருவதற்கான அடிப்படையாகக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 12 வருடமாகத் தன் கணவரால் பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு வந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.






இரண்டு மாநில உயர்நீதிமன்றங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளைக் வழங்கியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.