டெல்லி நகரவாசிகள் நடைபயணம், சைக்கிள் பயணம் முதலானவற்றை உடல்நலத் தேவைகளுக்காக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், டெல்லி சாலைகளை நடைபயணம், சைக்கிள் பயணம் ஆகியவற்றை மேற்கொள்வோருக்குப் பயனுள்ளவாறு மாற்ற வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதே கதைதான் சென்னையிலும்.


நகரத் திட்டமிடல், அதனை அமல்படுத்துதல் முதலானவற்றில் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட தவறான அணுகுமுறைகளின் காரணமாக, டெல்லி சாலைகளில் நடைபயணம் மேற்கொள்வது கடினமாகியுள்ளது. டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் தரவுகளின்படி, டெல்லியில் பயணம் மேற்கொள்வோரில் சுமார் 34 சதவிகிதம் பேர் நடப்பதை மட்டுமே பயண முறையாகக் கொண்டுள்ளனர். இவற்றும் 58 சதவிகிதம் பேர் கல்விக்காகவும், 31 சதவிகிதம் பேர் வர்த்தகம் மற்றும் தொழில் தேவைகளுக்காகவும் நடைபயணம் மேற்கொள்கின்றனர். 


மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கும், அங்கிருந்து புறப்படுவதற்கும் சுமார் 50 சதவிகிதம் பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். டெல்லி நகரத்திற்குள் நிகழும் பயணங்களில் சுமார் 60 சதவிகிதப் பயணங்கள் 4 கிலோமீட்டருக்கும் குறைவானவை; 80 சதவிகிதப் பயணங்கள் 6 கிலோமீட்டருக்கும் குறைவானவை. இத்தனை பேர் நடைபயணத்தைப் பயன்படுத்தி வரும் சூழலில், சுமார் 40 சதவிகிதச் சாலைகளில் நடைபாதைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



`டெல்லி 2041’ என்ற திட்டத்தின் கீழ், டெல்லி சாலைகள் நடைபயணத்திற்கும், சைக்கிள் பயணத்திற்கும் ஏதுவானதாக மாற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுமைத் திட்டங்களின் அடிப்படையில் தொடர்ந்து பயணங்கள் நடைபெறுவதற்கான பாதுகாப்பான பாதைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் டெல்லி நகரத்திற்குள் நடைபயணம், சைக்கிள் பயணம் முதலானவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது என இந்தத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


டெல்லியைப் போல, சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை நகரத்தையும் நடைபயணம், சைக்கிள் பயணம் ஆகியவற்றை ஊக்குவிக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னைப் பெருநகர மாநகராட்சி சார்பில் தி.நகர் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வோரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. எனினும், சென்னை நகரத்தின் பல இடங்களில் இதுபோன்ற நடைபாதைகளும், சைக்கிள் பயணம் மேற்கொள்வோரை மையப்படுத்திய சாலைகளும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. மெரினா கடற்கரை அருகிலுள்ள காமராஜர் சாலை, கொடிமரச் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அஷோக் நகர் முதலான பகுதிகளில் மிதிவண்டி பயணம் செல்வோருக்கு எனப் பிரத்யேகப் பிரிவுகள் சாலைகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. 



நடைபாதைகளிலும், சைக்கிள் பயணம் மேற்கொள்வோருக்கான பாதைகளிலும் சென்னை நகரம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டிருப்பதால் இந்தப் பிரச்னைகள் வருவதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சென்னை நகரத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் இல்லாததால் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு நிகழ்வதும் நடைபெறுகின்றன. 


ஆக, சென்னை, டெல்லி முதலான நகரங்களில் வாகனங்களை மையப்படுத்திய சாலை வடிவமைப்புகள் தற்போது நடைபயணம் மேற்கொள்வோர், மிதிவண்டியில் பயணிப்போர் ஆகியவற்றோரை மையப்படுத்தி வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.