தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


66 லட்சம் பேர் காத்திருப்பு:


தமிழகத்தில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. இதுதவிர சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியைசென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும். இந்தப் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். 


இந்நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 பேர்  அரசு வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஆண்கள், பெண்கள் எத்தனை பேர்?


ஏப்ரல் 30ம் தேதி 2023 வரையிலான புள்ளிவிவரத்தின்படி தமிழகத்தில் வேலை வேண்டி பதிவு செய்துள்ள ஆண்களின் எண்ணிக்கை 31,07,600 (31 லட்சத்து 7 ஆயிரத்து 600), பெண்களின் எண்ணிக்கை 35,77,671 (35 லட்சத்து 77 ஆயிரத்து 671), மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 266. மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 பேர் வேலைக்காக விண்ணப்பித்துக் காத்துள்ளனர்.


வயது வாரியாக ஏப்ரல் 30 2023 வரை வேலைக்காக விண்ணப்பித்திருப்போர் விவரம் வருமாறு:


18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 வயது முதல் 30 வயது வரையிலானவர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர். 31 முதல் 45 வயதிலானவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். மற்றும் 46 முதல் 60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர் ஆவர்.





மாற்றுத்திறனாளிகள் நிலவரம் என்ன?


மேற்கூறிய புள்ளிவிவரம் தவிர்த்து வேலை தேடி காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.


அதன்படி, எலும்பு நோய்களால் மாற்று திறனாளியானவர்களில் ஆண்கள் 74 ஆயிரத்து 503 பேர், பெண்கள் 38 ஆயிரத்து 513 பேர் உள்ளனர். மொத்தம் இவர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 016 பேர் ஆவர். காதுகேளாதோர் வகையறாவில், ஆண்கள் 9519 பேரும், பெண்கள் 4538 பேரும் என மொத்தம் 14057 பேர் வேலை தேடி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.


பார்வை சவால் உடையவர்களில் ஆண்கள் 12 ஆயிரத்து 271 பேர், பெண்கள் 5 ஆயிரத்து 577 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 848 பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆட்டிசம் மற்றும் இதர மனரீதியான பிரச்சனைகளுடன் உள்ளோரில் 1076 ஆண்கள், 361 பெண்கள் என மொத்தம் 1437 பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளில் மொத்தமாக 97 ஆயிரத்து 369 ஆண்கள், 48 ஆயிரத்து 989 பெண்கள் என மொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 358 பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.


இந்தியாவில் வேலையின்மை:


தமிழக நிலவரம் இவ்வாறாக இருக்க, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதோடு முந்தைய 4 மாதங்களில் மிகக் குறைந்த அளவை வேலையின்மை விகிதம் எட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.14 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) 2023 ஜனவரி மாதத்துக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது.