Breaking LIVE: விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6,000ஆக உயர்வு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
கனமழை காரணமாக உதகை மேட்டுப்பாளையம் ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 3000 ரூபாயிலிருந்து 6000ஆக உயர்வு.
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையொப்பமிட்டார்.
கீதா ஜீவன், அவரது சகோதரர் ஜெகன் உள்ளிட்ட 5 பேர் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்.பி குமார் தலைமையில் மணப்பாறை அருகே நடந்த போராட்டத்தில் 500 பேர் கலந்துகொண்டனர்.
ஓய்வூதிய பலன்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 680 உயர்ந்து ரூ.40,800க்கு விற்பனையாகிறது. 22 கிராம் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ரூ. 5100க்கு விற்பனை. ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
35வது அமைச்சராக தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இணைந்தார். சென்னை - கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை : ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து
விழுப்புரம்: வீடூர் அணை 32அடியில் 29.850 அடி நிரம்பியுள்ளது
விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் அணை முழு கொள்ளளவான 32 அடியில் தற்போது 29.850 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றுள்ளார்.
ராஜஸ்தானில், சவாய் மதோபூர் பகுதியிலிருந்து தொடங்கிய நடைபயணத்தில் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் ஏற்பட்டுள்ள நிலையில், நியூயார்க், டகோட்டா, கொலராடோ, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகள் முடங்கின.
நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறி மீண்டும் சேர்ந்து படிக்க முடியும் என யுஜிசி தெரிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 பரிந்துரைகளின்படி இளநிலை படிப்புக்கான கட்டமைப்புகளை யுஜிசி வடிவமைத்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவில் காவிரி நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இவ்விழாவுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்ற 10 ஆண்டுகளில் மொத்தம் 104 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்படவிருந்த 425 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
குன்னூரில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி பொறியாளர் வெங்கடேஷூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபத்யாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
”தமிழ் மீது வைத்திருந்த பற்றுக்கு நன்றி; தங்களது நீதி பரிபாலனத்தால் மக்கள் பலனடைந்துள்ளனர்” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Background
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்றைய விலை
இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 207ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிச.14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இந்நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -