தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆட்டோக்கள் செயல்பட்டு வருகின்றன. ஓலா, யூபர் போன்ற வாகன சேவை தளங்கள் வந்த பிறகு இதனால் பல ஆட்டோக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள்:
இந்த நிலையில், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டனர். ஆட்டோ ஓட்டுனர்களின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
கட்டணம் எகிறுகிறதா?
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்டோ கட்டண உயர்வு கொண்டு வர வேண்டும், குறைந்தபட்ச தூரத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், ஓலா -யூபர் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும், பைக் டாக்சிகளையும் வரைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இந்த தனியார் செயலிகளை கட்டுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சென்னைப் போக்குவரத்து கழகத்தின் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சருடன் ஆலோசனை:
பைக் டாக்சியைப் பொறுத்தவரை கொண்டு வந்துள்ள நடைமுறைகள் நமக்கான விதிகளை சரிபார்த்து அதை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முதலமைச்சர் கவனத்திற்கு ஒட்டுமொத்தமாக கொண்டு சென்று என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து, அதற்கான தீர்வை சொல்வதாக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபமாக சில ஆண்டுகளாக ஓலா, யூபர் போன்ற தனியார் வாகன செயலிகள் காரணமாக ஆட்டோக்களின் கட்டணம் அதில் இணையாத ஆட்டோக்களின் கட்டணத்துடன் மாறுபட்டு இருக்கிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் கருத்துவேறுபாடு மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
மோதல் போக்கு:
மேலும், சில இடங்களில் இருசக்கர வாகனங்களும் ரேபிடோவாக ஓட்டி வருவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க வேண்டும், ஓலா -யூபர் போன்ற செயலிகள், பைக் டாக்சி ஓட்டுநர்களுடன் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.