OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் தன்னை பற்றி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆர்.பி. உதயகுமார், அதில், ஓபிஎஸ் குறித்து ஜெயலலிதா தன்னிடம் முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், ஆர்.பி. உதயகுமார் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வருகிறது. ஏற்கனவே, உதயகுமார், ஓபிஎஸ் பற்றி பேசிய நிலையில், அவருக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுக்கு வகையில் பேசியிருந்தார். தற்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆர்.பி. உதயகுமார், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ்-ஆர்.பி. உதயகுமார் இடையே வார்த்தைப்போர்
ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் யார் என்றே தெரியவில்லை, கூகுளில் அவரை தேடிப் பார்க்கிறேன் என, ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருந்தார். மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதற்கு பதிலடி கொடுத்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், 2008 காலகட்டத்தில், தன்னுடைய மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க டாக்டர் வெங்கடேசன் முன்வந்ததாகவும், தான் அதை மறுத்துவிட்டதால், ஜெயலலிதாவிடம் போய் கூறியபோது, மாவட்ட செயலாளர் பதவியை தன் மகனுக்கு வழங்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டதாவும், பின்னர் தானும் அதை ஜெயலலிதாவிடமே உறுதி செய்ததாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதாவிற்கு அடையாளம் தெரிந்தது போதும், ஆர்.பி. உதயகுமாருக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்தார்.
அதோடு, தான் டாக்டர் வெங்கடேசனை சந்திக்க செல்லும்போது, ஆர்.பி. உதயகுமார் எத்தகைய நிலையில் அங்கு அமர்ந்திருந்தார் என்பது பற்றி, அரசியல் நாகரிகம் கருதி தான் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆர்.பி. உதயகுமார் எப்படி பதவிக்கு வந்தார் என்பது மதுரை மக்கள் அனைவருக்குமே தெரியும் என்று விமர்சித்த அவர், தங்களை பற்றி பேசுவதை ஆர்.பி. உதயகுமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.
பதிலடி கொடுத்து ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியீடு
ஓபிஎஸ்-ன் இந்த பதிலடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது வீடியோ ஒன்றை ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும், ஆனால், அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தன்னிடமே ஜெயலலிதா கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் விளைவாகவே, 2010-ம் ஆண்டு, தேனியின் அதிகார மையம் என்று கூறிக்கொண்ட ஓபிஎஸ்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு, அங்கு நடந்த முல்லை பெரியாறு உரிமை போராட்டத்திற்கு, தன்னை தலைமை தாங்குமாறு ஜெயலலிதா கூறியதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதே 2010-ம் ஆண்டு, தேனியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திலும், ஓ. பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்குமாறு ஜெயலலிதா தனக்கு உத்தரவிட்ட வரலாற்றை ஓபிஎஸ்-க்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அதேபோல், டாக்டர் வெங்கடேசன் சந்திப்பின்போது, ஓபிஎஸ் எங்கு அமர்ந்திருந்தாரோ அங்குதான் தான் அமர்ந்திருந்ததாகவும், அதனால் அரசியல் நாகரிகம் கருதி சொல்லாமல் விட்டதை, தயவுகூர்ந்து சொல்லுமாறும் ஓபிஎஸ்-ஐ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அதிகாரம் வேண்டுமென்றால் ஓபிஎஸ் அமைதியாக இருப்பார் என்றும், அதிகாரம் இல்லை என்றால் அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இறுதியாக, விரக்தியின் உச்சியிலிருந்து ஓபிஎஸ் பேசியதற்கு, வேதனையின் உச்சியிலிருந்து தாம் பதில் அளிப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஓபிஎஸ் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதே, தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.