Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட, கூடுதல் அவகாசம் கோரி, எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.


தேர்தல் பத்திரங்கள் விவகாரம்:


தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


எஸ்பிஐ வங்கி கோரிக்கை:


இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டும் என, உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுதொடர்பான மனுவில்,நீதிமன்றம், அதன் இடைக்கால உத்தரவில் ஏப்ரல் 12, 2019 முதல், தீர்ப்பின் தேதி வரை அதாவது 15.02.2024 வரை பொது, நன்கொடையாளர் தகவல்களை வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த காலகட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக இருபத்தி இரண்டாயிரத்து இருநூற்று பதினேழு (22,217) தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட பத்திரங்கள் ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையில் சீல் செய்யப்பட்ட உறைகளில் டெபாசிட் செய்யப்பட்டன. இரண்டு வெவ்வேறு தகவல் பிரிவுகளில் இருப்பதன் மூலம், மொத்தம் நாற்பத்து நான்காயிரத்து நானூற்று முப்பத்து நான்கு (44,434) தகவல் தொகுப்புகள் ஆராய்ந்து, தொகுத்து, ஒப்பிடப்பட வேண்டும். எனவே 15.02.2024 தேதியிட்ட தீர்ப்பில் நீதிமன்றம் நிர்ணயித்த மூன்று வார காலக்கெடு முழுப் பணியையும் முடிக்க போதுமானதாக இருக்காது. இதனை கருத்தில் கொண்டு ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என எஸ்பிஐ வங்கி கோரிக்கை வைத்துள்ளது.






அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்:


இதுதொடர்பாக மூத்த வழக்கற்ஞர் பிரசாந்த பூஷன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளியானால்,  பல லஞ்ச விவகாரங்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமாக நடைபெற்ற ஒப்பந்தங்கள்/உதவிகள்  வெளிப்படும். இதன் காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்ததை போல, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எஸ்பிஐ வங்கி மூலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதனை ரிடிவீட் செய்துள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “வாழைப்பழக் குடியரசில் உள்ள மிகச்சிறிய வங்கி கூட சில வாரங்களில் இதுபோன்ற அடிப்படைத் தகவல்களை (நன்கொடையாளர் மற்றும் பெறுநர்) வழங்க முடியாது என்று கூறினால், அடிப்படை பதிவுகளை வைத்திருக்கும் விதிமுறைகள் தவறியதற்காக அதன் வங்கி உரிமம் ரத்து செய்யப்படும்! ஆனால், எஸ்பிஐ உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய வங்கி” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோம், ஒரு கிளிக்கில் அனைத்து தரவுகளும் கிடைக்காதா எனவும் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.