Electoral Bonds: தேர்தல் பத்திரங்களுக்கான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க, மார்ச் 6ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் பத்திரங்கள் விவகாரம்:


தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


கூடுதல் அவகாசம் கோரும் எஸ்பிஐ வங்கி:


தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், எஸ்பிஐ வங்கி தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகி கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இதுதொடர்பான மனுவில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மீட்டெடுப்பது மற்றும் தகவல்களை சரிபார்ப்பதற்கான நடைமுறை என்பது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணியாக இருக்கும்.  நன்கொடையாளர்களின் அடையாளங்கள்  காக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் பத்திரங்களை ஆராய்ந்து நன்கொடையாளர்களின் விவரங்களை தேர்தல் பத்திரங்களுடன் பொருத்துவது ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கும். 


ஜுன் 30 வரை அவகாசம் கிடைக்குமா?


தேர்தல் பத்திரங்கள் வழங்குவது தொடர்பான தரவுகள் மற்றும் பத்திரத்தை திரும்பப் பெறுவது தொடர்பான தரவுகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களின் விவ்ரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்பட்டது. நன்கொடையாளர் விவரங்கள் நியமிக்கப்பட்ட கிளைகளில் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டு, அத்தகைய சீல் செய்யப்பட்ட கவர்கள் அனைத்தும் மும்பையில் அமைந்துள்ள விண்ணப்பதாரர் வங்கியின் முதன்மைக் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை சமர்பிக்க ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என எஸ்பிஐ வங்கி கோரிக்கை வைத்துள்ளது.


ராகுல் காந்தி சாடல்:


இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோடி தன்னால் இயன்றவரை முயல்கிறார். தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்.பி.ஐ. ஏன் விரும்புகிறது..? ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கேட்பது பருப்புகளில் கருப்பு எதுவும் இல்லை, முழு பருப்புகளும் கருப்பு என்பதை காட்டுகிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் 'மோதானி குடும்பமாக' மாறி தங்கள் ஊழலை மறைக்க முயல்கின்றன. தேர்தலுக்கு முன் மோடியின் உண்மையான முகத்தை மறைக்க இதுவே கடைசி முயற்சி" என்று பதிவிட்டுள்ளார்.