தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.


இதற்கிடையே, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளை உருவாக்கியுள்ளது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 


தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறும் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பிற கட்சிகளிலும் குறிப்பாக அதிமுகவிலும் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஆளுநர் விவகாரத்தை பொறுத்தவரையில், சமீப காலமாகவே, எதிர்கட்சி மாநிலங்களுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மோதல் வெடித்தது. மாநில அரசு தயார் செய்த ஆளுநர் உரையில் சில பத்திகளை வாசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தது புதிய சர்ச்சையை கிளப்பியது.ய


வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் தனது உரையை வாசித்து கொண்டிருந்தபோது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது பெரும் அரசியல் பிரச்சினையாக வெடித்தது. ஆனால், பின்னர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது பதற்றத்தை சற்று குறைத்தது. 


இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அரசுக்கு ஆளுநர் திருப்பி மீண்டும் சர்ச்சை வெடித்தது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்ப இருக்கும் நிலையில் ஆளுநர் ரவி இன்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். 


ஆளுநர், மாநில அரசின் மோதலை பொறுத்தவரையில், இதை நாம் ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. ஏனென்றால், கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர், மாநில அரசுக்கு இடையே நிகழ்ந்து வரும் மோதலின் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டும்.


மேலும் படிக்க: திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குற்றமாகுமா? உச்ச நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன?