திருமண உறவில் மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்துவது தற்போதிருக்கும் சட்டத்தின் படி குற்றமாக கருதப்படவில்லை. ஆனால், மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் பட்சத்தில், அதை குற்றமாக கருதக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 


திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குற்றமாகுமா?


இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை வரும் மே 9ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மூத்த வழக்கறிஞர் இந்திரா இந்திரா ஜெய்சிங் கோரிக்கை விடுத்தார்.


மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதற்கு பதில் அளிக்கையில், "இதற்கான வாதங்களை முன்வைக்க ஒன்றரை நாள்கள் ஆகும். இந்த வழக்கு சட்டரீதியான மாற்றங்களை மட்டுமல்ல, பரவலான சமூக தாக்கத்தையும் ஏற்படுத்தும்" என தெரிவித்தார்.


டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?


மேலும், இந்த விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை, உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்கக்கடாது என துஷார் மேத்தா வாதிட்டார். ஆனால், இரு நீதிபதிகளின் பார்வை, ஏற்கனவே தெரிந்துவிட்டதால் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொள்வோம் என உச்ச நீதிமன்றம் பதில் அளித்தது.


முன்னதாக, இந்த விவகாரத்தில், கணவர் ஒருவர் தனது மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டால், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் பாலியல் வன்கொடுமையின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.


இந்திய தண்டனை சட்டம் 375ஆவது பிரிவில் அளிக்கப்பட்ட விலக்கின்படி, திருமண உறவில் பாலியல் வன்கொடுமை ஈடுபடுவது குற்றம் அல்ல. அதாவது, 18 வயதுக்கு கீழ் இல்லாத தனது சொந்த மனைவியுடன், அவரது அனுமதியின்றி ஒரு ஆண் பாலியல் உறவு கொள்வது  குற்றம் அல்ல.


இந்த விவகாரத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம், இரு நீதிபதிகள் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு வேறுபட்ட தீர்ப்பை அளித்தது. இந்திய தண்டனை சட்டம் 375ஆவது பிரிவில் அளிக்கப்பட்ட விலக்கை சட்ட விரோதம் என, அந்த அமர்வை தலைமை தாங்கி நடத்திய நீதிபதி ராஜீவ் ஷக்தர் அறிவித்தார்.


அதே அமர்வில் இடம்பெற்ற நீதிபதி ஹரி சங்கர், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் சட்டப்பேரவைதான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இந்த பிரச்னையில் சமூக, கலாச்சார மற்றும் சட்டம் உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.