உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டடீ கப்பில் சிலுவை குறியீடு இருந்ததால், டீ விற்பனை செய்த கடையை அடைத்து விளக்கம் அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பதி கோவிலில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம், வேற்று மத வழிபாடு, வேற்று மத குறியீடுகளுடன் கூடிய பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள டீக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பேப்பர் கப்பில் 'It's a tea Shirt' என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில், வார்த்தைகள் டிசைனாக எழுதப்பட்டிருந்தது. அதில் ‘t' என்ற எழுத்துரு சிலுறை குறியீடு போல இருந்தது. சிலுவை குறியுடன் கூடிய டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பதி மலையில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில் இந்த டீ கப்புகளை வாங்கியதாக டீ கடை உரிமையாளர் தெரிவித்திருகிறார். அதன் அடிப்படையில் அங்கு சென்று தேவஸ்தான சுகாதாரத் துறையினர், விஜிலன்ஸ் துறையினர் ஆகியோர் சோதனை செய்தனர். அந்தக் கடையில் உள்ள டீ கப்புகளை சோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடையை மூட உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் விஜிலன்ஸ் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்க அந்த கடை உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த விசயத்தில், டீ கப்பில் உள்ள ‘t' என்ற எழுத்து சிலுவை போல தெரிந்துள்ளது. ஆனால், அது சிலுவை குறியீடு இல்லை என்றும் பலர் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் தவறாக புரிந்துகொண்டு, 't' என்ற எழுத்துருவை பெரிதாக்கி இப்படி செய்துவிட்டனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.