மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில்,  அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தேர்தல் பரப்புரை தீவிரம்:


மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 8ம் தேதி அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரசிற்கும், எதிர்க்கட்சியான பாஜகவிற்கும் நேரடி போட்டி நிலவி வருகிறது. இதனால்,  சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி, தன் கட்சி பிரமுகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தானும் சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார்.


நடுவழியில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்:


அந்த வகையில் வடக்கு பகுதிகளில் மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக பாக்டோக்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பிறகு, ஜல்பைகுரி பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக  போதிய வெளிச்சமின்மை இல்லாத சூழல் உருவானது.  இதனால் ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமான ஓட்டி தடுமாறிய நிலையில்,  அவசர கதியில் அந்த ஹெலிகாப்டர் சிலிகுரி அருகே உள்ள செவோக் ஏர்பேஸில் தரையிறக்கப்பட்டது.


கொல்கத்தா விரைந்த மம்தா:


இந்த சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜியின் பயணம், பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு சாலை வழியாக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அங்கிருந்து விமானத்தின் மூலம் கொல்கத்தா வந்தடைந்தார் மம்தா பானர்ஜி.






மருத்துவமனையில் அனுமதி:


கொல்கத்தாவை வந்தடைந்த மம்தா பானர்ஜி உடனடியாக, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், மம்தா பானர்ஜி முதுகுத்தண்டு மற்றும் மூட்டில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


வைரலாகும் வீடியோ:


இதனிடையே, மம்தா பானர்ஜி மருத்துவமனைக்குள் செல்லும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தனியாக நடக்க முடியாமல், மருத்துவரின் உதவியுடன் கைதாங்கலாக மம்தா மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.