Tirupati Annaprasadam: திருப்பதியில் வழங்கப்படும் அன்னதானத்தில் மசால் வடையும் சேர்க்கப்பட்டு இருப்பது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள பெருமானை தரிசிக்க நாள்தோறு, நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அவர்களுக்காக தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு இலவச அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தான், பக்தர்களுக்கான அன்னதானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, அன்னதான மெனுவில் மசால் வடையும் இணைக்கப்பட்டுள்ளது.
அன்னபிரசாதத்தில் மசால் வடை:
திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்களுக்கான அன்னதானத்தை மேம்படுத்துவதற்காக உணவிற்கான மெனுவில் மசால் வடையை சேர்க்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். குறிப்பக வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் மசாலா வடைகளை இணைத்து, பக்தர்களுக்கான அனுபவத்தை மேலும் சுவையாக மாற்றுமாறு TTD தலைவர் BR நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக, 5,000 மசாலா வடைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
திட்டம் எப்போது அமலுக்கு வரும்?
மெனு மாற்றங்களை இறுதி செய்வதற்கு முன்பு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நிவர்த்தி செய்வது குறித்து, வரும் நாட்களில் அதிகாரிகள் செயல்முறையை கண்காணிக்க உள்ளனர். அனைத்தும் இறுதியான பிறகு மசாலா வடை அடங்கிய புதுப்பிக்கப்பட்ட மெனுவை, தலைவர் தலைமையில் நடைபெறும் முறையான நிகழ்வின் போது அறிமுகப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.