பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சோனுபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் சவுத்ரி என்பவர்தான், ராகுல் காந்தி மீது ஒரு வினோத வழக்கை ஒன்றை பதிந்துள்ளார். ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததால் பாலை கொட்டிவிட்டதாக தெரிவித்து, அவர் ஒரு வழக்கை பதிந்துள்ளார்.


ராகுல் காந்தி என்ன பேசினார்.?


டெல்லியில், கடந்த 15-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவின்போது, தொழிலாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாங்கள் நியாயமான போராட்டத்தை நடத்துகிறோம் என்று நினைக்க வேண்டாம், இதில் நியாயம் இல்லை, பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே நாங்கள் போராடுவதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம். பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன, அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருவதாகவும் பேசினார்.


ராகுல் காந்தியின் பேச்சால் அதிர்ச்சியடைந்து பாலை கொட்டினேன் - முகேஷ்


இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த முகேஷ் குமார் சவுத்ரி என்பவர், ராகுல் காந்தி மீது வழக்கு ஒன்றை பதிந்துள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையக திறப்பு விழாவில், ராகுல் காந்தியின் பேச்சை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், ஒரு உண்மையான இந்தியனாக மனம் மிகவும் புண்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, ராகுல் காந்தியின் பேச்சு நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில், தான் கையில் வைத்திருந்த பால் வாளியை கீழே போட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அதில் 250 ரூபாய் மதிப்புள்ள 5 லிட்டர் பால் இருந்ததாகவும், அதனால், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் முகேஷ் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு, கவுஹாத்தியிலும் ஒருவர் வழக்குப் பதிந்து, அதற்கு முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.