திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams (TTD)) கோயில் சொத்து விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயிலின் வங்கி கணக்கில் 10 டன் தங்கமும், 15 ஆயிரத்து 938 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆந்திராவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். ’திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும்.’ என்று சொல்வதுண்டு. 


மாநிலத்தின் பாதுகாப்பு துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் நிதி வழங்குவதாக சமூக வலைதளங்கள் வெளியான தகவல் உண்மையில்லை என்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாவும் திருப்பதி தேவஸ்தான தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் விவரம்:


கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான 10.3 டன் அளவில் தங்கம் உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 13,025 கோடி ரூபாய் ரொக்கப்பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. தற்போது ரூ.15 ஆயிரத்து 938 கோடி ரொக்கம் டெபாசிட் தொகை உள்ளது.


2019ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339.74 டன் இருந்தது. தற்போது 2.9 டன் ஆக அதிகரித்துள்ளது.


ஏழுமலையானின் தங்க நகைகள், ரொக்கம் ஆகியவை அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் என தேவஸ்தான நிர்வாக செயலாளர் ஏ.வி. தர்ம ரெட்டி ( AV Dharma Reddy) தெரிவித்துள்ளார்.


திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்து மதிப்புகள் பற்றி திருப்பதி தேவஸ்தானம் கடந்த செப்டெம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது.


”இவ்வளவு சொத்துக்கள் கோயிலுக்கு சேர திருப்பதி பாலாஜி மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பலரும் பணமாக, நகையாக, பொருளாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மதம் கடந்தும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதையும் நாம் காண முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு  1.2 கோடி (ரூ.1,02,00,000) ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். 


சொத்து மதிப்பு :


திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாவும், கடந்த மூன்றாண்டுகளில் முதலீட்டின் அளவு 2,900 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.