ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஆறு மாநில இடைத்தேர்தல் :
பீகாரில் மொகாமா மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளுக்கும் ஹரியானாவில் அடம்பூர் தொகுதியிலும் தெலங்கானாவில் முனுகோட் தொகுதியிலும் ஒடிசாவில் தாம்நகர் (தனி) தொகுதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பீகாரில், வழக்கில் ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், மொகாமா தொகுதியின் அப்போதைய எம்எல்ஏவான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அனந்த் குமார் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கோபால்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங், ஆகஸ்ட் மாதம் காலமானதை அடுத்து அத்தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தின் கோலா கோக்ரநாத் மற்றும் ஒடிசாவின் தாம்நகர் தொகுதிகளும் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இடைத்தேர்தல் முடிவுகள் :
ஹரியானாவில் குல்தீப் பிஷ்னோய் மற்றும் தெலங்கானாவில் கே. ராஜகோபால் ரெட்டி ராஜினாமா செய்ததால், அடம்பூர் மற்றும் முனுகோட் தொகுதிகள் காலியாகின. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்பில் உள்ளது. உத்தர பிரதேசம் கோலா கோக்ரநாத் தொகுதியிலும் ஹரியானா அடம்பூர் தொகுதியிலும் பீகார் கோபால்கஞ்ச் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஒடிசா தாம்நகர் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. பீகார் மொகாமா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றிபெற்றுள்ளது. தெலங்கானா முனுகோட் தொகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
இடைத்தேர்தல் நடைபெற்ற ஏழு தொகுதிகளில் பாஜக வசம் மூன்று தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இரண்டு தொகுதிகளும் சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் வசம் தலா ஒரு தொகுதியும் இருந்தன.
பா.ஜ.க. ஆதிக்கம் :
பீகாரை பொருத்தவரை, பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழலில், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை, சிவசேனை கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து பாஜகவின் உதவியோடு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். இதையடுத்து, அவர்களின் கட்சி சின்னம் முடக்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் சார்பில் வேட்பாளர்கள் தனித்தனியே களமிறக்கப்பட்டிருந்தனர்.