ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பிய தனது மகன், சமீபத்தில் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் ஆடைகளை அகற்றி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வி. அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு இது தொடர்பாக புகார் அனுப்பியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த சுங்க அதிகாரிகள் அதிகாரத்தை மீறி, தனது மகனை அனந்தபுரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவரின் ஆடைகளை அகற்றி சோதனை செய்ததாகவும் விமான நிலையத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முன்பு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய அவர், "எனக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அத்தகைய தீவிர நடவடிக்கைக்கு மாஜிஸ்திரேட்டின் ஒப்புதல் தேவை. இது ஒருவரின் தனியுரிமைக்கான உரிமையை மீறும் செயலாகும். சுங்க விதிகளில் அதற்கான நடைமுறைகள் இருந்தாலும் சுங்க அதிகாரிகள் அதை தானாகவே செய்ய முடியாது" என்றார்.
மாநிலங்களவை உறுப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு சுங்கத்துறை அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை. விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டுமே செய்வதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர் ஒருவர் பேசுகையில், "அதிகாரிகள் தங்கள் கடமையை செய்தனர். விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதை தடுக்கும் முயற்சியில் ஏஜென்சி தீவிரம் காட்டி வருகிறது" என்றார்.
இதற்கிடையில், சில உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், சுங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, "வஹாப் மகனின் ஆடை கழற்றப்படவில்லை. அவரின் மகனுக்கு எதிராக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதை வஹாப் மறுத்துள்ளார். மருத்துவமனையில் தனது மகன் ஆடையை அகற்றி சோதனையிட்டதாகவும், சுற்றறிக்கை பற்றி எதவும் சொல்லப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில், வஹாப் ஒரு நிகழ்வில் உரை நிகழ்ச்சியபோது இந்த சம்பவம் குறித்து பேசியிருந்தார். அவர் தனது உரையில், தனது மகன் தாடியுடன் இருந்ததால், தனது மகனின் தோற்றம் சுங்கத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறியிருந்தார்.