இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் (The Tirumala Tirupati Devasthanams (TTD)) நடவடிக்கை எடுத்துள்ளது. 18 பேரும் விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரியயலாம் என  தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் உள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பணிபுரியும் 18 பேர் இந்து நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதை நிர்வாக குழுவினர் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவிக்கையில்,” இந்து சமய நடைமுறையை பின்பற்றாத 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்து நடைமுறையை பின்பற்றாதவர்கள் கோயில் நிர்வாக பணியில் இருக்க முடியாது.” எனத் தெரிவித்தார். 

அந்த 18 பேரையும் பணியில் இருந்து விருப்ப ஓய்வு அல்லது அரசு துறையின் வேறு பிரிவில் பணி மாற்ற செய்ய வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் பரிந்துரைத்துள்ளது.  கோயில் நடைமுறைகள் மற்றும் நிர்வாகத்தில் இந்து சமய வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே அனுமதிப்பது வழக்கம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்ந்த நிர்வாக பணிகளில் இருப்பவர்கள் இந்து பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். திருப்பதி கோயிலின் தனிச்சிறப்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோயில்கள் மற்றும் மதம் சார்ந்த புனிதத் தன்மையைக் காப்பதில் தேவஸ்தானத்தின் உறுதியுடன் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு பொறுப்பேற்ற பிறகு, அங்கு பணிபுரிபவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பதை அவர் உறுதி செய்து வருதாக நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு, இவர் 2024-ல் பொறுப்பேற்றபோது ”திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு அளிப்பதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.