திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் மீண்டும் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற, இரண்டாம் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து வந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் வரும் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏதுவாக இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி, பாதயாத்திரை செல்வோருக்கு முன்னுரிமை என பல்வேறு முறைகளில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அன்றைய நாளில் இருந்து ஜனவரி 1 ஆம் தேதியான இன்று வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் எனப்படும் சொர்க்க வழியாக பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கான டோக்கன்கள் டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி காலை 4.27 மணி வரை விநியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு இலவச டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியானது நாளை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்களுக்கு தேதி, நேரம் ஆகியவை தரிசனம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதிகாலை 4 மணி முதல் இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதனை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள் மதியம் 12 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் காணிக்கை விபரம் மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் திருப்பதியில் சுமார் 2.52 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 22வது மாதமாக டிசம்பரிலும் சுமார் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கை வந்தது. மேலும் ஆண்டு வருமானமாக ரூ.1.398 கோடி உண்டியல் காணிக்கை கிடைக்கப்பெற்றதாகவும், அதிகப்பட்சமாக ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி காணிக்கை கிடைத்ததாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.