பலரின் வாழ்வில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்கு படித்த பிறகும், பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. அந்த வகையில், பஞ்சாபை சேர்ந்த பேராசிரியருக்கு வேலை கிடைக்காததால்  
காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


பிஹெச்டி படித்தவருக்கு இந்த கதியா? 


பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சந்தீப் சிங். இவருக்கு வயது 39. இருப்பினும், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் அவரை வேலையை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க காய்கறிகளை விற்க தள்ளியுள்ளது.


பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் சந்தீப் சிங். சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் பஞ்சாபி, இதழியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்று இன்னும் படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.


சம்பளக் குறைப்பு, சரியான ஊதியம் இல்லாமை போன்ற இடையூறுகளைச் சந்தித்து வேலையை விட்டவர் சந்தீப் சிங். இதுகுறித்து அவர் பேசுகையில், "சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்காததாலும், அடிக்கடி சம்பளக் குறைப்பு ஏற்பட்டதாலும் வேலையை விட்டு விலக நேரிட்டது. அந்த வேலையைச் செய்து முடிப்பது எனக்குக் கடினமாகிவிட்டது. அதனால் தான் நானும் என் குடும்பமும் பிழைக்க காய்கறி விற்பனையாளராக மாறினேன்" என்றார்.


காய்கறிகளை விற்று வாழ்க்கையை ஓட்டும் பேராசிரியர்:


மேலும் பேசிய அவர், "தினமும் வீடு வீடாக சென்று காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். பேராசிரியராக இருந்ததை விட காய்கறி விற்று அதிக பணம் சம்பாதிக்கிறேன். ஒரு நாள் முழுக்க வேலை செய்துவிட்டு அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிப் பரீட்சைக்குப் படிக்கிறேன்" என்றார்.


ஆசிரியர் பணியில் இருந்து சிறிது பிரேக் எடுத்தாலும், சந்தீப் சிங், தனது ஆசிரியர் பணியின் மீதிருக்கும் ஆர்வத்தை கைவிடவில்லை. பணத்தைச் சேமித்து ஒரு நாள் சொந்தமாக டியூஷன் சென்டரைத் திறக்க ஆசைப்படுகிறார்.


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை தொட்டுள்ளது. இது தொடர்பாக பல ஆய்வரிக்கைகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு, இந்தியாவில் நிலவி வந்த வேலையில்லா திண்டாட்டம் குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ)  தரவுகளை வெளியிட்டிருந்தது. 


அதன்படி, கடந்தாண்டு டிசம்பரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் முந்தைய மாதம் பதிவான 8 சதவீதத்தில் இருந்து 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.30 சதவீதமாக அதிகரித்தது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் பதிவான 8.96 சதவீதத்தில் இருந்து 10.09 சதவீதமாக உயர்ந்தது. அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.44 சதவீதமாக சரிந்தது.