சமீப காலமாக, மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர், பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஆகியோர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்த திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டுகிறது. முறையான வாழ்க்கைமுறையை பின்பற்றாமல் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


கிரிக்கெட் விளையாடிய இளைஞருக்கு மாரடைப்பு:


இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துபோது மாரடைப்பு ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணம் அடைந்த இளைஞரின் பெயர் இந்தல் சிங் ஜாதவ் பஞ்சாரா. இவருக்கு வயது 22. கார்கோன் மாவட்டம் பால்வாடா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்கூட் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சனிக்கிழமை மாலை போட்டி ஒன்றில் இந்தல் சிங் ஜாதவ் பஞ்சாரா பந்துவீசும்போது அசௌகரியமாக உணர்ந்துள்ளார்" என்றார். பத்வா பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் விகாஸ் தல்வேர், இதுகுறித்து பேசுகையில், "இறந்த நிலையில்தான் பஞ்சாரா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மாரடைப்பால் இறந்தார். பிரேத பரிசோதனையை தொடர்ந்து அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாராவை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்கள், போட்டியின் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறினர்" என்றார்.


பந்துவீசும்போது நெஞ்சுவலி:


இந்த சம்பவம் பற்றி ஷாலிகிராம் குர்ஜார் என்ற கிராமவாசி பேசுகையில், "முதலில் பேட் செய்து 70 ரன்கள் எடுத்த பர்கத் தாண்டா கிராம அணிக்காக பஞ்சாரா விளையாடினார். அணி பந்துவீசும்போது, ​​நெஞ்சுவலி இருப்பதாக கூறி மரத்தடியில் போய் அமர்ந்தார் பஞ்சாரா. அணி வெற்றி பெற்ற பிறகு, தன்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மற்ற வீரர்களை பஞ்சாரா கேட்டுக் கொண்டார். அங்கிருந்து அவர் பத்வா பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்" என்றார்.


சமீபத்தில், கர்நாடகாவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் நடித்து கொண்டிருந்தபோதே, இளைஞர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே, அந்த இளைஞர் சரிந்து விழுந்து உயிரிழந்தார். 


திடீர் மரணங்களுக்கு காரணம் என்ன?


இந்த திடீர் இறப்புகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உச்சப்பட்ச அமைப்புதான் ஐ.சி.எம்.ஆர். அதன் இயக்குநர் ராஜீவ் பால், இதுகுறித்து கூறுகையில், "எந்த காரணமும் இல்லாமல் திடீரென ஏற்படும் மரணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.


கொரோனாவின் பின்விளைவுகள் ஏதேனும் இருந்தால், அதைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, மற்ற இறப்புகளைத் தடுக்கவும் இந்த ஆய்வுகள் உதவும்" என்றார். எந்த ஒரு நோயும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு இளைஞர் எதிர்பாராத மரணம் அடைவதே திடீர் மரணம் என  ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.