ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
திருப்பதி கோயிலில் அதிரடி கட்டுப்பாடுகள்:
அதன்படி, குழந்தைகளுடன் திருப்பதி மலை ஏறும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பெற்றோரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) கேட்டு கொண்டது. அதேபோல, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படிக்கட்டுகள் மூலம் திருப்பதி மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதுமட்டும் இன்றி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
பக்தர்களுக்கு தடியை கொடுக்க உள்ள தேவஸ்தானம்:
இந்த நிலையில், தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வனவிலங்களை சமாளிக்கும் வகையில் மர தடியையோ அல்லது கட்டையையோ கொண்டு வர வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் பி. கருணாகர் ரெட்டி கூறுகையில், "வனவிலங்குகள் தாக்கினால் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் மரக் குச்சி வழங்கப்படும். எந்தளவுக்கு தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்கு அனைவருக்கும் தடி வழங்குவோம்.
வனவிலங்குகள் வராமல் இருக்க, பாதையில் உள்ள உணவுக் கடைகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்றும் பக்தர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடமாடும் பகுதியில் வேலி அமைக்கும் திட்டம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கோயில் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது" என்றார்.
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தங்களுக்கு இன்னல் தரும் வகையில் இருப்பதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவாதி கிரண் என்ற பக்தர் கூறுகையில், "கோயிலில் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், சில நடவடிக்கைகள் பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம், மதியம் 2 மணிக்கு மேல் குழந்தைகளை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் இரவு முழுவதும், மறுநாள் காலை 5 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்" என்றார்.
குழந்தையை அடித்து கொன்ற சிறுத்தை:
சிறுத்தையால் கொல்லப்பட்ட குழந்தையின் பெயர் லக்ஸிதா. கடந்த வாரம், தனது பெற்றோருடன் மலையேறச் சென்றபோது தெரியாமல் அவர் காட்டுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் செல்லும் படிக்கட்டுகளில் அமைந்துள்ள மற்றொரு கோயிலுக்கு அருகில் உள்ள புதர் நிறைந்த பகுதியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் உள்ள காயங்கள், வனவிலங்கால் அவர் அடித்து கொள்ளப்பட்டதை உறுதி செய்தது.
கடந்த ஜூன் மாதம், அப்பகுதியில் மூன்று வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானான். ஆனால், சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டான். சுமார் 150 கேமராக்களைப் பயன்படுத்தி, அந்த சிறுத்தை சிக்கிய பின்னர் மற்றொரு காட்டில் விடப்பட்டது.