வந்தே பாரத்தில் பயணி ஒருவர் பீடி பிடித்ததால் கூடூர் மற்றும் மனுபோலு இடையே ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.


வந்தே பாரத் ரயில்:


விரைவான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை படிப்படியாக விரிவாகம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், வந்தே பாரத் ரயில்கள் அவ்வப்போது விபத்தில் சிக்குவது, பாதி வழியில் பழுதாகி நிற்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. இந்நிலையில் தான் பயணி ஒருவர் பீடி பிடித்ததால் வந்தே பாரத் ரயில் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.






பீடி புகைத்த பயணி:


திருப்பதி மற்றும் ஐதராபாத் இடையேயான வந்தேபாரத் ரயில் சேவை வழங்கம்போல் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று 20702 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்பட்டப்போது , திருப்பதியில் அங்கீகரிக்கப்படாத பயணி ஒருவர் ஏறியுள்ளார். C-13  பெட்டியில் ஏறிய அவர் திடீரென கழிவறக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு புகைபிடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கழிவறையில் இருந்த தானியங்கி புகை அணைக்கும் கருவி செயல்பாட்டிற்கு வந்து, தீயை அணைக்கும் பொடியை தூவியுள்ளது. 


பதறிய பயணிகள்:


இதனால் C-13 பெட்டியில் இருந்த பயணிகள் பீதியடைந்து, அவசர கால தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் ரயிலின் கார்டிற்கு தகவல் தெரிவித்தனர். ரயிலில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் தீ விபத்தை உணர்ந்து தீயணைப்பு கருவிகளுடன் உடனடியாக சி-13 கோச்சுக்கு விரைந்தனர். புகையை அணைக்க தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனிடையே, கூடூர் மற்றும் மனுபோலு இடையே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.  அதில் இருந்த பயணிகள் கழிவறையில் சிக்கியிருந்த பயணியைக் காப்பாற்ற வெளியில் இருந்து கழிவறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். பெட்டி முழுவதும் புகை சூழ்ந்ததால் பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கினர்.


காவலில் பயணி:


மீட்கப்பட்ட அந்த பயணி நெல்லூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் கழிவறையில் அமர்ந்து அவர் புகைபிடித்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக  ரயில்வே சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், ரயில் எண்.20702 திருப்பதி-செகந்திராபாத் வந்தே பாரத் 16.46 மணி முதல் 17.10 மணி வரை மனுபோலுவில் நிறுத்தப்பட்டு இருந்தது. சம்பவம் தொடர்பாக பயணிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை:


ரயில் பயணத்தின் போதும் மற்றும் ரயில் நிலைய வளாகத்திலும் எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.