நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத் பவார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1999ஆம் ஆண்டு, அக்கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர், தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். தொடக்கத்தில் சோனிகா காந்திக்கு எதிராக அரசியல் செய்தாலும் பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியுடனே கூட்டணி அமைத்து, அவருடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில், மகாராஷ்டிர அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டமாக சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிளவுபட்டது.
சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து, மகாராஷ்டிராவில் பாஜக அரசாங்கத்தில் இணைந்தார். அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இம்மாதிரியான சூழலில், பிரதமர் மோடிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சரத் பவார் கலந்து கொண்டது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்தது.
சரத் பவார் குறித்து பிரதமர் மோடி கருத்து:
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் சரத் பவார், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சரத் பவார் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் காரணமாகவே சரத் பவாரால் பிரதமராக முடியவில்லை என மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்களை நேற்று சந்தித்து பேசிய அவர், "காங்கிரஸைப் போல் பா.ஜ.க.வுக்கு அகங்காரம் இல்லை. அதனால் ஆட்சியை தக்க வைக்கும்" என்றார்.
பிரணாப் முகர்ஜியுடனான முதல் சந்திப்பு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜியுடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய அவர், "உங்கள் கட்சி (பாஜக) உங்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, உங்கள் பெயரில் அறுதிப் பெரும்பான்மை பெற்றதாக அவர் என்னிடம் கூறினார்.
இது முதல் முறையாக நடந்தது. ஏன் என்றால், இதற்கு முன், பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவித்த எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை போலவே சிவசேனா கட்சி பிளவுப்பட்டதற்கும் பாஜகவே காரணம் என வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "சிவசேனாவுடனான கூட்டணியை நாங்கள் முறித்துக் கொள்ளவில்லை. 2014 ஆம் ஆண்டு முதல், சிவசேனா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தது.
ஆனால், அவர்களின் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'சாம்னா' எங்கள் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்தது. ஆதாரமற்ற விமர்சனங்களை வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பின. அதை நாங்கள் பொறுத்துக்கொண்டோம். நாங்கள் அதை லேசாக எடுத்துக் கொண்டோம்" என்றார்.