டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டத்தை தொடர்ந்து, அதை வழக்கமான சட்டமாக மாற்ற, டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு கொண்டு வந்தது. 


இது,  டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழி வகை செய்கிறது.


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்ட மசோதா:


கடந்த 3ஆம் தேதி, இந்த மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது, மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.


இதையடுத்து மசோதா மீது ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 131 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும்,  102 பேர் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை ஆதரவுடன் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்த மசோதா சட்டமாக டெல்லியில் அமல்படுத்த உள்ளது.


மற்ற எதிர்க்கட்சிகளின் உதவியோடு, இந்த மசோதாவை தோற்கடிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்ட முயற்சி மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக கடும் வாதங்களை எடுத்து வைத்தனர்.


இருப்பினும், ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, மத்திய பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றியது.


ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய அரவிந்த் கெஜ்ரிவால்:


இந்த நிலையில், மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த நிலைபாட்டுக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.


அதில், "டெல்லி நிர்வாக (திருத்தம்) மசோதாவுக்கு எதிராக வாக்களித்த உங்கள் கட்சிக்கு டெல்லியின் இரண்டு கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். 


நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக மனப்பூர்வமான பாராட்டுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் மீதான உங்கள் தளராத விசுவாசம் இன்னும் பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அரசியலமைப்பை கீழிறக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்" என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.