திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பக்தர்கள் மற்றும் வசூலான காணிக்கை உள்ளிட்ட, முழு விவரங்களையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 30 மணி நேரம் வரிசையில் காத்திருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருமலையில் குவியும் பக்தர்கள்:


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை திருமலை திருப்பதி கோயிலில் அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவனது பிப்ரவரி மாதம் 22ம் தேதியே தொடங்கியது. அதன்படி ஆன்லைனில் நடைபெற்ற டிக்கெட் புக்கிங்கில்,   கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.


20.57 லட்சம் பக்தர்கள்:


இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, மார்ச் 1 முதல் 31ம் தேதி வரையில் மட்டும், 20 லட்சத்து 57 அயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் உண்டியல் காணிக்கையாக 120 கோடியே 29 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு கோடியே இரண்டாயிரம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.


30 மணி நேரம் காத்திருப்பு:


இதனிடையே, தரிசன டோக்கன் வாங்காமல் நேரடியாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தபோது, 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை நீள்கிறது. திருமலையிலேயே 3 இடங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக திருமலையில் 60 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.


ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு:


இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் திருமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொள்வதற்கான, டிக்கெட் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது.  அப்போது, சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் மற்றும் சர்வ தரிசனம் ஆகியவற்றிற்கான டிக்கெட்டுகள் முறையே, ரூ.300, ரூ.500 மற்றும் ரூ.1000 எனும் விலைக்கு விற்பனையாகின. அதோடு இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in எனும் இணையதள முகவரி மூலம் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.