தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கார்கே, மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு


மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்களை இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.


ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய கார்கே, எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள ஸ்டாலின், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என கார்கேவிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியாக திமுக திகழ்கிறது.


எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது குறித்து இறுதியாகவில்லை. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்களின் பதிலுக்காக காங்கிரஸ் காத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்:


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்ட நிலையில், வரும் மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.


கடந்த இரண்டு மக்களவை தேர்தலிலும் பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்தது. 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களை பாஜக தனித்து கைப்பற்றியிருந்தது. 2014ஆம் ஆண்டு, 282 இடங்களில் பாஜக வெற்றிபெற்றிருந்தது.


2019ஆம் ஆண்டு, 303 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜக இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்காது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்தது. சமீப காலமாக, காங்கிரஸ் கட்சியையும் பாஜகவையும் ஒரு சேர எதிர்த்து வரும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.


இது தேசிய அரசியலில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. மேற்குவங்கம், உத்தர பிரதேசம் ஆகியவை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் இங்கு கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.