ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் சில காலம் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அம்மாநிலம் 2014 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானாவாக பிரிக்கப்பட்டப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். 


தொடர்ந்து ஜெய் சமைக்யந்திரா கட்சியை தொடங்கிய கிரண் குமார் ரெட்டி 2018 ஆம் ஆண்டு அக்கட்சியை கலைத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த அவர் சில வாரங்களுக்கு முன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். 


அரசியல் வரலாறு 


ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் அருகேயுள்ள நகரிபள்ளியில் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரண் குமார் ரெட்டி பிறந்தார். இவரது தந்தை அமர்நாத் ரெட்டி பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் 1989 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ. ஆக தேர்வானார்.


2004 ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக இருந்த கிரண் குமார் ரெட்டி, 2009 ஆண்டில் ஆந்திர சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆந்திர முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் 2009 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன்பிறகு முதலமைச்சரான ரோசய்யா தனிப்பட்ட காரணங்களுக்காக ஒன்றரை ஆண்டுகளில் விலகினார். இதன் பின்னர் ஆந்திர முதலமைச்சராக கிரண் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தார். 


அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு ஆந்திராவை இரண்டாக பிரிக்க முடிவு செய்த போது, அதற்கு அக்கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.