திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டை செய்வதற்காக பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை நீங்குவதற்கு பக்தர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விலக்கு ஏற்ற வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெரும் பாரம்பரியத்தை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது, பூதாகரமான சர்ச்சை வெடித்துள்ளது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு:
முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே இதற்கு காரணம் என சாடியிருந்தார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளியான ஆய்வில் லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ( CALF ) ஆய்வில் லட்டில் கலப்படம் நடந்தது உறுதியானது. இதுகுறித்து விசாரிக்க ஆந்திர அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி லட்டின் புனிதம் கேட்டுள்ளதால் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு பரிகாரமாக இன்று மாலை, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக, திருமலையில் உள்ள பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பு இல்லை என கடந்த முறை ஆட்சி செய்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.