டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, தனது கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மரியாதை செய்யும் வகையில் தனக்கு அருகில் ஒரே காலியான நாற்காலியை வைத்துள்ளார். 


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமாக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்தார்.


டெல்லி அரசியல்: இவருக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. எனினும் தலைமைச் செயலகம் செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், எந்த கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது.


இதனால், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறைக்குச் செல்லும்போது கூட முதல்வர் பதவியைத் துறக்காத அர்விந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளியில் வந்தபிறகு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டெல்லியின் முதலமைச்சர் பதவி கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவரான அதிஷிக்கு வழங்கப்பட்டது.


இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற அதிஷி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஸ்டைலில் ஒரு செயலை செய்துள்ளார். தனக்கு அருகில் ஒரு காலியான நாற்காலியை வைத்துள்ளார். தனது கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு நாற்காலியை ஒதுக்கும் விதமாக அவர் இப்படி செய்துள்ளார்.


ஓபிஎஸ் ஸ்டைலில் அதிஷி செய்த காரியம்: முதலமைச்சர் நாற்காலியில் தான் அமர்ந்தாலும் உண்மையான முதலமைச்சர் கெஜ்ரிவால்தான் என குறிப்பிடும் வகையில் இப்படி செய்துள்ளார். இதுகுறித்து அதிஷி கூறுகையில், "இந்த நாற்காலி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமானது. நான்கு மாதங்களுக்குப் பிறகு டெல்லி மக்கள் அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.


பகவான் ஸ்ரீராமர் வனவாசம் சென்றபோது, ​​அவர் இல்லாத நேரத்தில் பாரதத்தை ஆட்சி செய்ய வேண்டிய நிலை பரதனுக்கு ஏற்பட்டது. பரதனுக்கு ஏற்பட்டது போன்றது எனது நிலை" என்றார்.



கடந்த 2016ஆம் ஆண்டு, உடல்நலக்குறைவால் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முதலமைச்சராக பதவியேற்ற ஓ பன்னீர்செல்வம், இதே போன்றதொரு செயலை செய்தார்.


முதலமைச்சர் இருக்கையில் அமராமல், தன்னுடைய இருக்கையிலேயே அமர்ந்தார். அதற்கு முன்பு, ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோதும், முதலமைச்சர் நாற்காலியில் அமர பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார்.