Supreme Court: சிறார் ஆபாச படங்கள் என்பதை இனி, 'சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள்' என்று குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
சிறார் ஆபாசப் படங்கள் என்ற வரையறையை சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பொருள் என்று குறிப்பிடும் வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. திருத்தத்தை ஒரு அவசரச் சட்டம் மூலம் கொண்டு வரலாம். எனவும், சிறார் ஆபாசப் படங்கள் என்ற வார்த்தை எந்த நீதித்துறை உத்தரவிலும் பயன்படுத்தப்படாது என்பதை நாங்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சிறார் ஆபாசப் படங்கள்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக இதுதொடர்பான வழக்குகளைக் கையாளும் போது சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என குறிப்பிடவும் உச்ச நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து
சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், ஆபாச படங்களை பார்த்ததாக கடந்த ஜனவரி மாதம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. அதேநேரம், வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறார் ஆபாச விடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனவும் கூறி காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து குழந்தைகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதுதொடர்பான விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
வழக்கின் தீர்ப்பில் சிறார்களை உள்ளடக்கிய ஆபாச உள்ளடக்கத்தை சேமித்து வைப்பதும் மற்றும் பார்ப்பதும் கூட, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டங்களின் கீழ் குற்றமாகும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது ஒரு முக்கியத் தீர்ப்பு என்றும், சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் நீதித்துறையால் இவ்வளவு விரிவாகக் கையாளப்படும் உலகின் முதல் நிகழ்வு இதுவே என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது காட்டம்:
தீர்ப்பில், “தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற, தனது தீர்ப்பின் மூலம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மிக மோசமான தவறை செய்துள்ளதாக” உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பரிதிவாலா ஆகியோர் சாடியுள்ளனர்.