திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்தது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் மக்களுக்கு மட்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருப்பதியில் நேரில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக இலவசமாக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறினார்.
மேலும், அடுத்தாண்டு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது கோயிலில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
சமீபத்தில், அமைக்கப்பட்ட திருமலை - திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் ஏற்கனவே தலைவராக இருந்த சுப்பா ரெட்டி மீண்டும் இரண்டாவது முறை, தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தந்தையின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் மதிப்புமிக்க, பல்வேறு சலுகைகளை அளிக்கக்கூடிய அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியானது நியமிக்கப்படாமல் இருந்தன.
இந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்க பொது செயலாளர் கண்ணையா, உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு மற்றும் ஜி.ஆர்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அறங்காவலர்கள் முடிவில் தலையிட முடியாது. உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்று. இந்த பொறுப்பானது மிகவும் மரியாதைக்குரிய பொறுப்பாக கருதப்படுகிறது.
Tirupati Laddu: திருப்பதி லட்டு இனி கையில் இல்லை... பையில் தான்....! அதுவும் சாதாரண பை இல்லை...!