ஆந்திர மாநிலத்தின் உள்ள திருப்பதியில் அமைந்துள்ள திருமலை திருப்பதி ஆலயம். இந்த ஆலயம் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி ஏராளமான வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஆலயத்தில் வழங்கப்படும் பிரசாதமான லட்டும் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த நிலையில், திருப்பதி ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லட்டுகளை விற்பனை செய்வதற்காக சிறப்பு விற்பனை பிரிவு தொடங்கப்பட்டது. இதை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர் ரெட்டி மற்றும் தர்மாரெட்டி தொடங்கி வைத்தனர்.
இந்த சிறப்பு விற்பனை பிரிவில் லட்டுகள் மக்கும் பைகளில் வைத்து விற்கப்படுகிறது. இந்த பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மண்ணில் மக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் சோளத்தின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான பைகள் 90 நாட்களில் மக்கிவிடும். இந்த பைகளை விற்பனை பிரிவில் கொண்டு வருவதற்கு முன்பாக இந்த வகையிலான பைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மக்கும் பைகளை டி.ஆர்.டி. ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். பக்தர்களிடம் இந்த பைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, பின்னர் இந்த பைகளை முழு வீச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சாதாரண பிளாஸ்டிக் பைகளில் உள்ள வேதிப்பொருட்களால் அவை மக்குவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிடும். இதன் காரணமாக, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் இந்த பைகளின் பயன்பாட்டை கொண்டு வந்துள்ளோம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2022ம் ஆண்டு) முதல் ஜூலை 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.