ஜிஎஸ்டி கவுன்சிலின் 45ஆவது கூட்டம் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. கிட்டதட்ட 20 மாதங்களுக்கு பிறகு நேரடியாக ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஏனென்றால் இதற்கு முன்பாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தக் கூட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார். 


அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது தொடர்பாக இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரைவாக தன்னுடைய முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுக்கப்பட்டது. அதில் அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டிசல் ஆகிய இரண்டையும் கொண்டு வர வேண்டாம் என்று கூறியுள்ளதால் இதை தற்போதைக்கு ஜிஎஸ்டியில் கொண்டு வரும் எண்ணமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அத்துடன் இந்த முடிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். 






மேலும் இந்தக் கூட்டத்தில் சில மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் கிட்ருடா மருந்திற்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் அளிக்கப்பட்ட விலக்கு  வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் என்ற முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர பயோடிசலுக்கான வரியும் 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்விகி மற்றும் சோமேட்டோ நிறுவனங்களின் சேவைகளுக்கு புதிதாக வரி எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய வருவாய் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஜிஎஸ்டி வரியின் மேல் விதிக்கப்பட்டுள்ள செஸ் வரிகள் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேலாக வசூலிக்கப்படும் என்று 43ஆவது கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது 2026ஆம் ஆண்டு வரை வசூலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை வைத்து வாங்கிய கடன்கள் திருப்பி செலுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். 


மேலும் படிக்க: ஒரே நாளில் இந்தியாவில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி!