பயணிகள் இன்றி திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடைந்தது. ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கிய பின் ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்தது.
அப்போது யாரோ ஒருவர் பாதி எரிந்த நிலையில் இருந்த சிகரெட் துண்டை ரயிலின் எஸ்6 பெட்டி கழிவறையில் வீசி சென்றதாக் கூறப்படுகிறது. இதனால் அந்த பெட்டி தீ பற்றி எரிந்தது.
இதனை பார்த்த பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் நிலைய ஊழியர்கள் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கு காரணம் சிகரெட் துண்டா? அப்படி பாதி எரிந்த சிகரெட் துண்டுதான் தீ விபத்துக்கு காரணம் என்றால், அதை வீசி சென்றது யார் என்பது குறித்தும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் புகழ்பெற்ற கோயில்களில் திருமலை திருப்பதியும் ஒன்று. இந்தியாவில் பக்தர்கள் காணிக்கை வழங்குவதில் திருமலை திருப்பதி கோயிலே முதலிடத்தில் உள்ளது. அந்த கோயிலில் வழங்கப்படும் லட்டு உலக புகழ்பெற்றது.
இச்சூழலில், திருப்பதி கோயிலில் லட்டு விநியோகம் செய்யும் ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துவிட்டதால், லட்டு வாங்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடை கொண்ட லட்டு பிரசாதத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, திருப்பதி தேவஸ்தானத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், ஒரு பக்தர் தான் வாங்கிய லட்டுவை எடை போடுமாறு லட்டு கவுண்டர் ஊழியர்களிடம் கோரிக்கை வைப்பது காணப்பட்டது. கவுன்டர் ஊழியர்கள், கவுன்டரில் உள்ள எடை இயந்திரத்தில் லட்டுவை எடைபோட்டபோது, 160 முதல் 180 கிராம் வரை நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு மாறாக, 90-100 கிராம் வரை மட்டுமே இருந்தது.
பிரசாத விநியோகத்தில் அரசு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் வஞ்சகமாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய பக்தர், கவுண்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.