ப்ரணவ் ஜுவல்லர்ஸ் பணமோசடி:

திருச்சியை தலைமையிடமாக கொண்ட ப்ரணவ் ஜுவல்லர்ஸ் சென்னை, நாகர்கோவில், மதுரை மற்று புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 8 கிளைகளை கொண்டு செயல்பட்டு வந்தது. அதோடு, புதிய நகை சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடையே பணத்தை வசூலித்தது. ஆனால், சொன்னபடி பலன்கள் கிடைக்கவில்லை எனவும், செய்த முதலீட்டையும் திருப்பி தரவில்லை என வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

Continues below advertisement

இந்த விவகாரத்தில் 100 கோடி ரூபாய் அளவிற்கு, பணமோசடி நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். பழைய நகைகளை கொடுத்து விட்டு, ஒரு வடத்திற்கு பிறகு வந்து கேட்டால் எடைக்கு எடை புதிய நகை வழங்குவதுடன் அவற்றிற்கு கூலி, சேதாரம் எதுவும் இல்லை என விளம்பரப்படுத்தப்பட்டது. பிரணவ் ஜுவல்லர்ஸின் இந்த விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ் நடித்திருந்தார். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, பெண்கள் பலர் பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் முதலீடு செய்துள்ளனர். நகைக்கடையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கு புது நகைகளாக வாங்கி செல்ல முதலீட்டாளர்கள் காத்திருந்துள்ளனர். அந்த நேரத்தில் தான் தனது ஒவ்வொரு கிளைகளையும் பிரணவ் ஜுவல்லர்ஸ் மூடியுள்ளது.

பிரகாஷ் ராஜுக்கு தொடர்பு இல்லை:

திருச்சியில் உள்ள நகைக்கடையும் இழுத்து மூடப்பட்டது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஜுவல்லர்ஸ் மூடப்பட்டதால், முதலீடு செய்த நூற்றுக்கணக்கான மக்கள் புகார் அளித்தனர்.  அதிக வட்டி தருவதாக கூறி நகையை பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரணவ் ஜூவல்லர்ஸ் மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.  இதனை அடுத்து, இந்த கடையின் விளம்பர படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

Continues below advertisement

ஆனால், பிரணவ் ஜுவல்லரி  மோசடி வழக்கில் பிரகாஷ் ராஜுக்கும் தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். கடையின் உரிமையாளர் மதனை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என்றும் விளம்பரத்தில் மட்டும் நடித்ததாகவும், முதலீடும் செய்யவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பிரகாஷ் ராஜிடம் விசாரணை நடத்தப்போவதில்லை என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ்  அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மோசடி வழக்கில் பிரகாஷ் ராஜுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "என்னை நம்பி எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.